Monday, 28 December 2015

குல தெய்வம்

இன்றைய பதிவில் நாம் பார்க்கப்போவது குல தெய்வம் பற்றியே. ஒவ்வொரு குடும்பத்திற்கும் குலதெய்வம் ஒன்று இருக்கும். வழி வழியாக சொல்லப்பட்டு நாம் தெரிந்து கொண்டிருக்கும் தெய்வம். நமக்கே நமக்கென்று அருள் புரிய காத்திருக்கும் தாயுள்ளம் கொண்டது. நமது குடும்பத்தின் மூத்த உறுப்பினர் தெய்வசக்தியுடன் இருந்தால் என்ன செய்வோம். தலையில் தூக்கி வைத்து கொண்டாடியிருப்போம். வேண்டியதெல்லாம் கேட்போம். ஒவ்வொரு பிரச்சினைக்கும் அங்கேதான் சரணடைவோம். இல்லத்தில் நடக்கும் ஒவ்வொரு விசேசத்திற்கும் வருந்தி அழைப்போம். எந்த இக்கட்டிலும் கை விடமாட்டார் என்பதும் உறுதி. இவை அத்தனையும் குல தெய்வத்திற்கும் பொருந்தும்.

       என்னவோ தெரியவில்லை, சிலர் மட்டுமே இந்த முக்கியமான தெய்வ சக்தியை மறவாமல் வழிபடுகிறார்கள். மற்றவர்கள்...? அதற்கு பல காரணங்கள் உள்ளன. வேலை, வியாபாரம் என்று பொருளீட்டல் பயணத்தில் வெகு தொலைவு சென்று விடுவது. குடும்ப உறுப்பினர்கள் அனவரும் வெவ்வேறு திசைகளில் இருப்பது. குலதெய்வத்தை கும்பிட அனைவரும் ஒன்று சேர்ந்து செல்ல வேண்டும் என்பது மரபு. முடிந்தவரை இதனை பின்பற்றலாம். ஆனால் வருடத்திற்கு ஒரு முறை சென்று பார்ப்பதே நல்லது. நம் குழந்தைகள் வருகிறார்களா என்று ஒரு தாய் போல நாம் வருவதற்காக காத்திருக்கும். தாயை தள்ளி வைத்து மைந்தன் அமைதி அடைவது ஏது?

      முக்கியமான வேண்டுதல்கள் நிறைவேற்றப்போகும் போதும், தல யாத்திரைகள் செல்லும் போதும் குலதெய்வத்தை முதலில் வணங்கிக் கிளம்ப வேண்டும். வீட்டிலேயே பூஜை செய்யலாம். ஒரு உண்டியல் வைத்து அதற்கு சிறிய தொகை ஒன்றை காணிக்கையாக சேர்த்து , உண்டியல் நிரம்பியதும் உரிமைபட்ட குலதெய்வம் கோவிலில் சேர்ப்பிக்க வேண்டும். தல யாத்திரை வெற்றிகரமாக நடந்து முடியும். அதே போல திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு முன் வீட்டிலேயே ஒரு வெள்ளிக் கிழமையன்று பொங்கல் வைத்து பிரார்த்திக்க வேண்டும். இனிதே நடக்கும். நேரில் செல்ல தோது படவில்லையென்றாலும் கோவிலுக்கு பத்திரிக்கை அனுப்பி விட வேண்டும். திருப்பதி வரும் பக்தர்களுக்கு கூட தேவஸ்த்தான வேண்டுகோளில் குலதெய்வம் வணங்கிய பின் கோவிலுக்கு வர வேண்டும் என்று உள்ளது. குல வழக்கப்படி சிவராத்திரியன்று வணங்கலாம். அல்லது இருந்த ஊரிலேயே ஆடி மாதத்தில் ஒரு வெள்ளிக்கிழமையன்று மாவிலக்கு செய்து பிரியமுடன் வணங்கலாம்.

        வீட்டில் திருமணத்தடை , சந்தான பிராப்தி இன்மை இவை இருந்தால் குல தெய்வ வழிபாடு சரி செய்து விடும். சிலர் தவறாக புரிந்து கொள்வார்கள் - குலதெய்வத்தை வழிபடாத கோளாறுதான் இந்த தடைகள் என்று. ஆனால் அது அப்படியல்ல நமக்கு உள்ள கெட்ட நேரம்தான் இதற்கெல்லாம் காரணம். அதனை சரி செய்ய குலதெய்வம் அருள் புரியும். நமக்கு எதிரான அத்தனை துர் சக்திகளையும் அழிக்கும் வல்லமை உடையது. தன் பிள்ளைகளின் நலனுக்காக அத்தனை தெய்வத்திடமும் வேண்டுகோள் வைக்கும். அதனால்தான் நம் நல்வரவிற்காக வருடந்தோறும் காத்திருக்கும். புத்தாண்டு பிறக்கப்போகிறது, முதல் வேண்டுதலாக குலதெய்வத்தினை வணங்குவோம். முடிந்தால் வருட இறுதிக்குள் ஒருமுறை சென்று சிறப்பித்து தாய் மனதை குளிரச் செய்யுங்கள்.

 -- நம் குலதெய்வம் பற்றித் தெரியவில்லை எனில் பெரியோரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். நம்முடைய ஜாதகம் கூட குலதெய்வத்தை சொல்லிவிடும். சரியான ஜோதிடரை அணுகி தெரிந்து கொள்ளலாம். 

வளம் தரும் வயிரவன்

ஈஸ்வரனின் ஆதி சொரூபங்களில் ஒன்று. வயிரவன், சட்டைனாதர், கால பைரவர், சேத்திர பாலன் அனைத்தும் மற்ற சொரூபங்கள். வயிரவனின் அருள் கிட்டினால் இல்லத்தில் அத்தனையும் நிறையும். மகிழ்வு பொங்கும் என்பது உண்மை. எனக்குத் தெரிந்து , திருப்பத்தூர் பிள்ளையார்பட்டி அருகில் வயிரவன்பட்டியில் வயிரவன் அருள் பாலிக்கிறார். பௌர்ணமி அன்றும் தேய்பிறை அஸ்டமி அன்றும் சிறப்பான பூஜைகள் நடைபெறும். சிவனை வணங்கினால் மோட்சம் மட்டுமே கிட்டும் , பொருளாதார சம்பந்தமான வேண்டுதல்கள் அவரிடம் கேட்கக்கூடாது என்று சொல்வார்கள். ஆனால், வயிரவன், தாயின் கருணையுடன் நம் இல்லத்தை கவனித்துக் கொள்வார். அவருக்கு விருப்பமானது கோபத்தை தவிர்த்து அனைவரிடமும் இன்முகம் காட்டுவது.
ஸ்வர்ண ஆகர்ஷன பைரவ அஷ்டகம்

தனம் தரும் வயிரவன் தளிரடி பணிந்திடில் தளர்வுகள் தீர்ந்து விடும்
மனம் திறந்தவன் பதம் மலரிட்டு வாழ்த்திடில் மகிழ்வுகள் வந்துவிடும்
சினம் தவிர்த்தன்னையின் சின்மய புன்னகை சிந்தையில் ஏற்றவனே
தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

வாழ்வினில் வளம்தர வையகம் நடந்தான் வாரியே வளங்கிடுவான்
தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட தானென வந்திடுவான்
காழ்ப்புகள் தீர்த்தான் காணகம் நின்றான் காவலாய் வந்திடுவான்
தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

முழு நிலவதனில் முறையொடு பூஜைகள் முடித்திட அருளிடுவான்
உழுதவன் விதைப்பான் உடமைகள் காப்பான் உயர்வுற செய்திடுவான்
முழு மலர் தாமரை மாலையை ஜெபித்து முடியினில் சூடிடுவான்
தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

நான்மறை ஓதுவார் நடுவினில் இருப்பான் நான்முகன் நானென்பான்
தேனினில் பழத்தை சேர்த்தவன் ருசிப்பான் தேவைகள் நிறைத்திடுவான்
வான் மழையெனவே வளங்களை அருள்வான் வாழ்த்திட வாழ்த்திடுவான்
தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

பூதங்கள் யாவையும் தனக்குள்ளே வைப்பான் பூரணனன் நானென்பான்
நாதங்கள் ஒலிக்கும் நால்வகை மணிகளை நாணினில் பூட்டிடுவான்
காதங்கள் கடந்து கட்டிடும் மாயம் யாவையும் போக்கிடுவான்
தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

பொழில்களில் மணப்பான் பூஜைகள் ஏற்பான் பொற்குடம் ஏந்திடுவான்
கழல்களில் தண்டை கைகளில் மணியணி கனகனாய் இருந்திடுவான்
நிழல்தரும் கற்பகம் நினைத்திட பொழிந்திடும் நின்மலன் நானென்பான்
தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

சதுர்முகன் ஆண்வத்தலையினை கொய்தான் சத்தொடி சித்தானான்
புதரினில் பாம்பை தலியினில் வைத்தான் புண்ணியம் செய் என்றான்
பதரினை குவித்து செம்பினை எரித்தான் பசும்பொண் இடுவென்றான்
தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

ஜெய ஜெய வடுக நாதனே சரணம் வந்தருள் செய்திடுவாய் 
ஜெய ஜெய சேத்திர பாலனே சரணம் ஜெயங்களை தந்திடுவாய்
ஜெய ஜெய வைரவா ஜெகம் புகழ் தேவா செல்வங்கள் தந்திடுவாய்
தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

பௌர்ணமி அன்று இரவு எட்டு மணிக்கு தீப்த்தை ஏற்றிவைத்து பதினெட்டு தடவை பாராயணம் செய்தால், தன விருத்தி கிட்டும். ஒன்பதாவது பௌர்ணமியன்று அவல் பாயாசம் செய்து நிவேதிக்கலாம். அளவற்ற கீர்த்தியையும், தனத்தையும் தரும் இந்த பூஜையை விடாமல் செய்து வளம் பெறுங்கள்.

Monday, 30 November 2015

9ன் சிறப்பு தெரியுமா?

எண்களில் விசேஷமான எண்ணாக கருதப்படுவது ஒன்பது. அந்த எண்ணில் நீண்ட வாழ்வு எனும் அர்த்தம் பொதிந்திருப்பதாகச் சொல்கின்றனர், சீனர்களின் சொர்க்க கோபுரம், ஒன்பது வளையங்களால் சூழப்பட்டுள்ளது. எகிப்து, ஐரோப்பா, கிரீக் முதலான நாடுகளும் 9-ஆம் எண்ணை விசேஷமாகப் பயன்படுத்திப் போற்றுகின்றன. புத்த மதத்தில், மிக முக்கியமான சடங்குகள் யாவும் ஒன்பது துறவிகளைக் கொண்டே நடைபெறும். தங்கள், வெள்ளி மற்றும் பிளாட்டினத்தின் சுத்தத்தை 999 என்று மதிப்பிடுவார்கள். பெண்களின் கர்ப்பம், பூரணமாவது ஒன்பதாம் மாத நிறைவில்தான்! பரத கண்டத்தில், நம் இந்தியாவில் ஒன்பது எனும் எண் இன்னும் மகத்துவங்கள் கொண்டது. ஒன்பது என்ற எண்ணுக்கு வடமொழியில் நவம் என்று பெயர். நவ என்ற சொல் புதிய, புதுமை எனும் பொருள் உடையது.

நவ சக்திகள் - வாமை, ஜேஷ்டை, ரவுத்ரி, காளி, கலவிகரணி, பலவிகரணி, பலப்பிரமதனி, சர்வபூததமனி, மனோன்மணி

நவ தீர்த்தங்கள்: கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, சரயு, நர்மதை, காவிரி, பாலாறு, குமரி

நவ வீரர்கள் - வீரவாகுதேவர், வீரகேசரி, வீரமகேந்திரன், வீரமகேசன், வீரபுரந்திரன், வீரராக்ஷசன், வீரமார்த்தாண்டன், வீரராந்தகன், வீரதீரன்

நவ அபிஷேகங்கள்: மஞ்சள், பஞ்சாமிர்தம், பால், நெய், தேன், தயிர், சர்க்கரை, சந்தனம், விபூதி.

நவ ரசம்: இன்பம், நகை, கருணை, கோபம், வீரம், பயம், அருவருப்பு, அற்புதம், சாந்தம் ஆகியன நவரசங்கள் ஆகும்.

நவக்கிரகங்கள் - சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது

நவமணிகள் - கோமேதகம், நீலம், வைரம், பவளம், புட்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைடூரியம்

நவ திரவியங்கள் - பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம், காலம், திக்கு, ஆன்மா, மனம்

நவலோகம் (தாது): பொன், வெள்ளி, செம்பு, பித்தளை, ஈயம், வெண்கலம், இரும்பு, தரா, துத்தநாகம்

நவ தானியங்கள் - நெல், கோதுமை, பாசிப்பயறு, துவரை, மொச்சை, எள், கொள்ளு, உளுந்து, வேர்க்கடலை

சிவ விரதங்கள் ஒன்பது: சோமவார விரதம், திருவாதிரை விரதம், உமாகேச்வர விரதம், சிவராத்ரி விரதம், பிரதோஷ விரதம், கேதார விரதம், ரிஷப விரதம், கல்யாணசுந்தர விரதம், சூல விரதம்

நவசந்தி தாளங்கள் - அரிதாளம், அருமதாளம், சமதாளம், சயதாளம், சித்திரதாளம், துருவதாளம், நிவர்த்திதாளம், படிமதாளம், விடதாளம்

அடியார்களின் பண்புகள்: எதிர்கொள்ளல், பணிதல், ஆசனம் (இருக்கை) தருதல், கால் கழுவுதல், அருச்சித்தல், தூபம் இடல், தீபம் சாட்டல், புகழ்தல், அமுது அளித்தல்

நவரத்னங்கள் - தன்வந்த்ரி, க்ஷணபகர், அமரஸிம்ஹர், சங்கு, வேதாலபட்டர், கடகர்ப்பரர், காளிதாசர், வராகமிஹிரர், வரருசி (விக்ரமார்க்கனின் சபையிலிருந்த 9 புலவர்கள்; நவரத்னங்கள் எனச் சிறப்பிக்கப்படுவர்)

அடியார்களின் நவகுணங்கள்: அன்பு, இனிமை, உண்மை, நன்மை, மென்மை, சிந்தனை, காலம், சபை, மவுனம்.

நவ நிதிகள் - சங்கம், பதுமம், மகாபதுமம், மகரம், கச்சபம், முகுந்தம், குந்தம், நீலம், வரம்

நவ குண்டங்கள்:

யாகசாலையில் அமைக்கப்படும் ஒன்பது வகையிலான யாக குண்ட அமைப்புக்கள்:
சதுரம், யோனி, அர்த்த சந்திரன், திரிகோணம், விருத்தம் (வட்டம்), அறுகோணம், பத்மம், எண்கோணம், பிரதான விருத்தம்.

நவவித பக்தி : சிரவணம், கீர்த்தனம், ஸ்மரணம், பாத சேவனம், அர்ச்சனம், வந்தனம், தாஸ்யம், சக்கியம், ஆத்ம நிவேதனம்

நவ பிரம்மாக்கள் : குமார பிரம்மன், அர்க்க பிரம்மன், வீர பிரம்மன், பால பிரம்மன், சுவர்க்க பிரம்மன், கருட பிரம்மன், விஸ்வ பிரம்மன், பத்ம பிரம்மன், தராக பிரம்மன்

நவக்கிரக தலங்கள் - சூரியனார் கோயிவில், திங்களூர், வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு, ஆலங்குடி, கஞ்சனூர், திருநள்ளாறு, திருநாகேஸ்வரம், கீழ்ப்பெரும்பள்ளம்

நவபாஷாணம் - வீரம், பூரம், ரசம், ஜாதிலிங்கம், கண்டகம், கவுரி பாஷாணம், வெள்ளை பாஷாணம், ம்ருதர்சிங், சிலாஷத்

நவதுர்க்கா - ஸித்திதத்ரி, கஷ்முந்தா, பிரம்மாச்சாரினி, ஷைலபுத்ரி, மகா கவுரி, சந்திரகாந்தா, ஸ்கந்தமாதா, மகிஷாசுரமர்த்தினி, காளராத்ரி

நவ சக்கரங்கள் - த்ரைலோக்ய மோகன சக்கரம், சர்வசாபுரக சக்கரம், சர்வ சம்மோகன சக்கரம், சர்வ சவுபாக்ய சக்கரம், சர்வார்த்த சாதக சக்கரம், சர்வ ரக்ஷõகர சக்கரம், சர்வ ரோஹ ஹர சக்கரம், சர்வ ஸித்தி ப்ரத சக்கரம், சர்வனந்தமைய சக்கரம்.

நவநாதர்கள் - ஆதிநாதர், உதய நாதர், சத்ய நாதர், சந்தோஷ நாதர், ஆச்சாள் அசாம்பயநாதர், கஜ்வேலி கஜ்கண்டர் நாதர், சித்த சொவ்றங்கி நாதர், மச்சேந்திர நாதர், குரு கோரக்க நாதர்

உடலின் நவ துவாரங்கள் : இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு மூக்குத் துவாரங்கள், ஒரு வாய், இரண்டு மலஜல துவாரங்கள்

உடலின் ஒன்பது சக்கரங்கள் : தோல், ரத்தம், மாமிசம், மேதஸ், எலும்பு, மஜ்ஜை, சுக்கிலம், தேஜஸ், ரோமம்

18 புராணங்கள், 18 படிகள் என அனைத்தும் 9-ன் மூலமாக தான் உள்ளன. காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜபிக்க வேண்டும். எல்லா தெய்வத்தின் நாமாவளியும் ஜப மாலையின் எண்ணிக்கையும் இதை அடிப்படையாகக் கொண்டதுதான்! புத்த மதத்தினர் 108 முறை மணியடித்து, புது வருடத்தை வரவேற்றுக் கொண்டாடுகின்றனர். சீனாவில், 36 மணிகளை மூன்று பிரிவாகக் கொண்டு, சு ஸூ எனப்படும் மாலையைக் கொண்டு ஜபம் செய்வார்கள். ஸ்ரீகிருஷ்ணருக்குப் பிரியமான மாதம்... மார்கழி. இது வருடத்தின் 9-வது மாதம்! மனிதராகப் பிறந்தவன் எப்படி வாழ வேண்டும் என வாழ்ந்து காட்டிய ஸ்ரீராமபிரான் பிறந்தது, 9-ஆம் திதியான நவமி நாளில்தான். 9 என்ற எண்ணை கேலிக்கையாக எண்ணாமல் புராணங்களிலும், நடைமுறையிலும் சிறப்பிடம் பெற்றுள்ளது என்பதை போற்றுவோம்.

Friday, 27 November 2015

வடக்கை தலை வையாதே வாசலுக்கு கால் நீட்டாதே

சைவத் தமிழர் பழக்க வழக்கங்களில் கடைப்பிடிக்கப்படும் சில சம்பிரதாயங்களும் அவற்றிற்கான விளக்கங்களும்:

1. வடக்கு பக்கம் தலை வைத்து படுக்க கூடாது என்பார்கள் - காரணம் என்ன? 
இதை பற்றி அறிய, நாம் முதலில் காந்தம் (Magnet) பற்றியும் அதன் இயல்பு பற்றியும் அறிந்திருக்க வேண்டும்.

காந்தம், உலோகப் (இரும்பு (Iron) செப்பு போன்ற) பொருட்களையும், காந்த தன்மை கொண்ட பொருட்களையும் தன் வசம் இழுக்கும் வல்லமை கொண்டது என்பது நாம் சிறு வயதில் பாடசாலைகளில் செய்த ஆராய்ச்சியின் (Experiments) மூலம் அறிந்து கொண்டவைகளாகும்.

காந்ததிற்கு இரண்டு துருவங்கள் (Poles) உண்டு - வட துருவம் (North Pole) மற்றும் தென் துருவம் (South Pole). காந்தங்கள் இரண்டின் ஒத்த துருவங்கள் ஒன்றை ஒன்று விலகி கொள்ளும் (தள்ளும்)(Like Poles repel each other), எதிர் துருவங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கும் (இழுக்கும்)(Unlike poles attract each other) தன்மைகளைக் கொண்டதாகும்.

எனவே, நாம் ஆய்வு கூடத்தில் (Laboratory) ஆய்வு முடிந்த பின் எதிர் துருவங்களை ஒன்றாக வைப்போம். அப்போது தான் அதன் காந்த ஈர்ப்பு தன்மை அப்படியே இருக்கும். ஒரே துருவங்களை ஒன்றாக வைத்தால் அதன் காந்த ஈர்ப்பு தன்மை சிதைந்துவிடும். மேலும், இயல்பாக இருக்கும் காந்தம் (Natural Magnets) தன்னுடன் இருக்கும் இரும்பு துண்டுகளை சிறு சிறு காந்த துண்டுகளாக மாற்றும் தன்மை கொண்டது. 

பூமி எப்படி காந்தம் ஆனது? 
சூரியனின் வெப்பத்தால் பூமியின் கிழக்கு பகுதி சூடாகிறது. அப்போது பூமியின் மேற்கு பகுதி குளிர்ந்து இருக்கிறது. இதனால் வலிமையான, நிலையான, வெப்பமான மின்னோட்டம் கிழக்கு திசையில் இருந்து மேற்கு திசைக்கு சூரியனால் உருவாக்கப்படுகிறது. எனவே மின்னோட்டத்தின் திசைக்கு வலப்புறம் இருக்கும் வடக்கு திசை, நேர் மின்னோட்டதையும் (Positive Current), இடதுபுறம் இருக்கும் தெற்கு திசை, எதிர் மின்னோட்டதையும் (Negative Current) பெறுகிறது. இதனால் பூமி ஒரு பெரிய காந்தம் ஆகிறது. அத்துடன் பூமி தன்னைத்தானே சுற்றுவதனாலும் காந்த சக்தியைப் பெறுகின்றது.

மனிதன் எப்படி காந்தப் பொருள் ஆனான்? 
மனித உடலில் ஓடும் ரத்தம் வெள்ளை அணு, சிவப்பு அணு மற்றும் பல ரசாயன பொருட்களை கொண்டது. இதில் சிவப்பு அணுவில் இரும்பு சத்து உள்ளது. இந்த சிவப்பு அணுவின் காரணமாக மனிதன் பூமியின் ஈர்ப்பு தன்மைக்கு உள்ளாகிறான்.

எப்படி தூங்க வேண்டும்? 
பூமிக்கு இரண்டு துருவங்கள் உண்டு. வட துருவம் நேர் மின்னோட்டம் உடையது. தென் துருவம் எதிர் மின்னோட்டம் உடையது. இந்த மின்னோட்டம் வடக்கில் இருந்து தெற்கிற்கும், தெற்கில் இருந்து வடக்கிற்கும் செல்லும். அதே போல் மனிதனின் தலை நேர் மின்னோட்டம் கொண்டது. கால் எதிர் மின்னோட்டம் கொண்டது.

நாம் தெற்கு பக்கம் தலை வைத்து, வடக்கு பக்கம் கால் நீட்டி படுக்கும் போது, பூமியின் நேர் மின்னோட்டம் மனிதனின் எதிர் மின்னோட்டத்துடன் இருக்கும். காந்தத்தின் இயல்புப்படி மின்னோட்டம் சிராக இருக்கும்.

இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இதனை மாற்றி செய்யும் போது, நாம் பகல் முழுவதும் உட்கார்ந்து, நடந்து மற்றும் பல வேலைகள் செய்து சேர்த்து வைத்த சக்தி சீர்குலைந்துவிடும்.

எனவே தெற்கில் தலை வைத்து படுப்பது உத்தமம். இறந்தவர்களுடைய பூதவுடலையும் தெற்கே தலைவைத்து படுக்க வைப்பதனால் அனேகம்பேர் அதனை விரும்புவதில்லை. 

வாசலுக்கு கால் நீட்டக் கூடாதது. ஏன்?

வீட்டு வாசல் புனிதமானது. அதனால்தான் வீட்டு வாசல் முற்றத்தில் கோலம் போடுகிறார்கள். வாசலில் மாவிலை கட்டி புனிதப்படுத்துகிறார்கள்.

வீட்டு வாசல் அசுத்தமாகவும், கவனிப்பாரற்றும் இருக்குமாயின் வீட்டில் மகிழ்ச்சியையும், மங்களத்தையும் தரவல்ல சீதேவி வீட்டினுள் புக மாட்டாள் என்பது சைவத் தமிழர் பண்பாட்டில் வந்த கூற்று. வீடும், அதன் வாசலும் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அப்போதுதான் சீதேவி வீட்டில் குடி கொள்வாள்.

சீதேவி வரும் வாசலை (பாதை) நோக்கி கால் நீட்டினால் சீதேவி தன் வருகையை வீட்டார் விரும்பவில்லை என கருதி சீதேவி திரும்பிச் சென்று விடுவாள் என்பதனால்தான் வீட்டு வாசக்கு கால் நீட்டக் கூடாது என்றார்கள். வீட்டிற்னுள் சீதேவி வராவிட்டால் மூதேவி குடி கொள்வாள் என்பது ஐதீகம். மூதேவி வீட்டினுள் குடிகொண்டால் மகிழ்ச்சி குன்றும். துன்பம் பெருகும்.

வீட்டு வாசலில் மாவிலை கட்டுவதால் புனிதமாகின்றது. மாவிலையை தேவர்கள் ஆக ஆவகணம் செய்வது சைவவ மரபு. இங்கே தேவர்கள் தம்மை வரவேற்க காத்திருக்கிறார்கள் என்பதன் அடையாளமாகவே  வாசலில் மாவிலை கட்டப்பெறுகின்றது. மாவிலை கட்டும் போது மிகவும் அவதானம் தேவை. மாவிலையை முன்பக்கம் வளைது தொங்க விடுவது தேவர்கள் தலை வணங்கி வரவேற்பதாகவும், மாவிலையை பின்பக்கம் வளைத்து தொங்க விடுவது தேவர்கள் சீதேவியின் வரவை விரும்பவில்லை என கருதுவதாக பொருள் பெறும் என சைவ நூல்கள் விளக்கமளித்துள்ளன.

பிறப்பு இறப்பு

இறப்பு என்பது பழுதடைந்த உடல் செயல் இழப்பதையே இறப்பு அல்லது மரணம் என்று கூறுகிறார்கள்.

நாம் எப்படி சட்டை கிழிந்து விட்டால் அந்த சட்டையை தூக்கி எரிந்து விட்டு புது சட்டை போட்டு கொள்கிறோமோ அதே போல் ஆன்மா உம் புது உடலை எடுக்கும்.

புது உடலை எடுக்கும் நிகழ்சியை மறு பிறப்பு என்று கூறுகிறார்கள்.

ஆனால் இந்த மறு பிறப்பு என்பது உடனே நிகழ்ந்து விடாது.

ஒரு உடலை ஆன்மா விட்ட வுடன் அந்த ஆன்மா அந்த உடலுடன் இருந்த போது என்னென்ன கர்மங்கள் செய்ததோ அதற்க்கு தகுந்தாற்போல் அது பாவ புண்ணியத்தை சுமந்து கொண்டு இருக்கும். மேலும் கர்ம வாசனைகளும் சுமந்து இருக்கும். கர்ம வாசனை என்றால் நல்ல எண்ணம் இருந்தால் அதுவும் ஆன்மா வுடன் சேர்ந்து செல்லும். கெட்ட எண்ணம் இருந்தால் அதுவும் ஆன்மா வுடன் சேர்ந்து செல்லும்.

இப்படி ஓர் உடலை விட்டவுடன் ஆன்மா அந்த உடலின் பாவ புண்ணியம் மற்றும் கர்ம வாசனை இவற்றை சுமந்து செல்லும்.

கருட புராண சாஸ்த்ர படி இந்த ஆன்மா யம தூதர்களால் எடுத்து செல்லப்பட்டு செய்த பாவத்திற்கு உண்டான தண்டனைகளை அனுபவிக்க விடுவார்கள்.

புண்ணிய காரியங்கள் செய்து இருந்தால் அதற்க்கு உண்டான சுப பலனையும் அந்த ஆன்மா அனுபவிக்கும்.

பாவ புண்ணியங்கள் தீர்ந்த பிறகு அந்த ஆன்மா மீண்டும் மேகங்களில் தூக்கி எறியப்படும்.

மேகங்களின் மழையால் அந்த ஆன்மா பூமியை வந்து அடையும்.

பூமியில் விழுந்த வுடன் அந்த ஆன்மா தண்ணீரோடு தண்ணீராக இருந்து தானியங்களை வளர செய்யும்.

அந்த தானியம் உயிரினத்தின் உடலில் உணவாக செல்லும்.

உடலின் உள்ளே உணவாக சென்ற அந்த ஆன்மா உயிர் அணுவாக மாறும்.

அந்த ஆணின் உயிர் அணு கலவியின் போது பெண்ணின் உடலில் செலுத்த படும் போது அந்த ஆன்மா ஒரு உடலை பெரும்.

அந்த உடல் அந்த பெண்ணின் வயிற்றில் வளரும்.

பிறகு வெளியே வரும்.

மீதி உள்ள கர்மத்தை வெளியே வந்த வுடன் செய்யும்.

குறிப்பு : ஒரு மனிதன் இறந்த உடன் , அந்த ஆன்மா
எடுத்து செல்லப்பட்டு
பாவ புண்ணியத்திற்கு உண்டான தீய சுப பலனை அனுபவித்த பிறகு கூட ஏன் அவன் மீண்டும் பிறக்க வேண்டும்.

ஏனெனில் அவன் இன்னும் உண்மையை உணரவில்லை. தான் ஆன்மா என்று உணர வில்லை . மேலும் மேலும் பொன் பொருள் போகம் இவற்றில் விருப்பம் கொண்டு இந்த உலகத்தில் கட்டபடுகிறான்.

இறைவனே கதி என்று இறைவனையே நோக்கி செல்பவர்கள் விரைவில் இறைவனை அடைவார்கள். மீண்டும் பிறக்க மாட்டார்கள்

Wednesday, 25 November 2015

முனி என்றால் என்ன?


ஈஸ்வரன் பட்டம் என்பது மொத்தப்பிரபஞ்சத்திலும் இரண்டேபேருக்குத் தான் உண்டு.ஒருவர் ஈஸ்வரன் எனப்படும் சிவபெருமான்.மற்றவர் ஈவிரக்கமில்லாமல் தர்மத்தைக்காக்கும் சனீஸ்வரன்மூன்றாவதாக ஈஸ்வரப்பட்டம் பெற்றிருப்பது முனீஸ்வரன்.

சிவபெருமானின் அந்தரங்கக்காவலர்களில் ஒருவரே முனீஸ்வரன்.முற்காலத்தில் ஒரு கிராமத்தையே இரவுநேரங்களில் காப்பவர் முனிஆவார்.துஷ்டசக்திகளை அடியோடு ஒழித்துக்கட்டும் பொறுப்பு இவருடையது.
2000 வாட்ஸ் மின்சாரம் பாயும் மின்கோபுரங்களையே தூக்கி வீசி எறியும் சக்தியுடையவர் முனீஸ்வரன்.

இவர் செல்லும் பாதையில் இருக்கும் நிறுவனங்கள் விளங்காது.வேலைக்காரர்கள் வரமாட்டார்கள்.கட்டப்படும் வீடு பாதியிலேயே நிற்கும்.ஒருபோதும் அங்கே யாரும்குடியேற முடியாது.ஒருவேளை குடியேறினாலும் விரைவில் வேறிடம் செல்லும் நிர்ப்பந்தம் உண்டாகும்.அல்லது திடீர் மரணம் நிச்சயம்.

மகாராஷ்டிரபிராமணர்கள் மட்டுமே முனீஸ்வரனைக் கட்டுப்படுத்து சக்தியை அறிந்துள்ளனர்.

முனி என்ற பெயரைக்கொண்ட ஆண்கள்,பெண்கள் அளவற்ற குறும்பு செய்பவர்களாக இருக்கிறார்கள்.ஆனால்,இவர்களைப்போல்,பாசமுள்ள மனிதர்களைப் பார்ப்பது மிக அரிது.இவர்களை தம் வாழ்க்கைத்துணையாகக்கொண்டவர்களின் பாடு திண்டாட்டம் தான்.முனி என்ற பெயரை உடையவர் அன்புக்கு மட்டுமே கட்டுப்படுவார்.அதிகாரத்தால் இவர்களை சிறிதுகூடக் கட்டுப்படுத்தமுடியாது.
பல சந்தர்ப்பங்களில்,முனி என்ற பெயரைக்கொண்டவர்களின் நடத்தை மிக வினோதமானதாக இருக்கும்.சிலநேரங்களில்,இவர்கள் தன்னையறியாமல் கூறும் வார்த்தைகள் நிஜமாகும்.

ஒரு குடும்ப வம்சத்தை எடுத்துக்கொண்டால், அதில் சுமார் 100 கிளைகள் இருக்கும்.100 கிளைகள் என்பது 100 குடும்பங்களின் தலைமுறைகள் எனச் சொல்லலாம்.ஆனால்,ஒவ்வொரு தலைமுறையிலும்,ஒரே ஒரு குடும்பத்தில் உள்ள ஒரே ஒரு ஆண் அல்லது பெண்ணுக்கே அவர்களின் குலதெய்வத்தின் ஆசி கிடைக்கும்.அப்படி ஆசிகிடைத்தவர்கள் எப்போதும் மனதில் சோகமயமாகவே காணப்படுவார்.ஆனால்,அவருக்கு சகலசவுபாக்கியங்களும் இருக்கும்.இப்படி குலதெய்வ அருளாசி பெற்றவர்களுக்கு மட்டுமே முனி என்ற பெயரைக்கொண்டவர்கள் அருள்வாக்கு சொல்லுவார்.அல்லது ஜாதகப்பலன் கூறுவார்.

மதுரை,தேனி,கம்பம்,விருதுநகர்,சிவகாசி,சாத்தூர்,சங்கரன்கோவில்,குற்றாலம்,தென்காசி,ராஜபாளையம்,திருநெல்வேலி,நாகர்கோவில்,தூத்துக்குடி,திருச்செந்தூர்,மார்த்தாண்டம்,குளச்சல் முதலான பகுதிகளில் முனீஸ்வரரை குலதெய்வமாகக் கொண்ட குடும்பங்கள் பல லட்சங்கள் இருக்கின்றன.

முனீஸ்வரர் நள்ளிரவு 12 மணிக்கு மேல் 5 மணிக்குள் நகர்வலம் வருவார்.சுமார் 20 அடி உயரம் அதிகபட்சம் 1000 அடி உயரத்துக்கு வெண்புகை வடிவில் கண்கள் பஸ்ஸின் முன் விளக்கு(ஹெட் லைட்)அளவுக்கு அதாவது கால்பந்து சைசுக்கு பிரம்மாண்டமாக நெருப்புபோல பிரகாசிக்கும்.நேருக்குநேர் பார்த்தவர்கள் பலர் அதிர்ச்சியில் உடனே மரணமடைந்திருக்கிறார்கள்.

முனீஸ்வரர்கோவிலில் மேல்விதானம் இருக்காது.முனீஸ்வரன் கோவில் அருகே நிச்சயம் ஒரு விதவை குடியிருப்பாள்.நள்ளிரவில் முனி அவளுடன் தொடர்பு கொள்ளுவார்.முனீஸ்வரர் பூஜை என்றபெயரில் கிழக்குப்பதிப்பகம் ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளது.தொடர்புக்கு:www.nhm.in

சில முனிப் பெயர்களைப்பார்ப்போம்:
முனி,
முனிரத்தினம்,
முனிராஜ்.
நாகமுனி,
வீரமுனி
ஜடாமுனி
ராஜமுனி
முனிராஜா
அருள்முனி
முனிராம்
முருகமுனி
முனிக்கருப்பன்
முனிதங்கம்
முனிவைரம்
முனீஸ்வரன்
முனீஸ்வரி
ஜெயமுனி
பொன்முனி
வெண்முனி
நாகரத்தினமுனி
சிவமுனி
மகாமுனி
சக்திமுனி
சுந்தரமகாமுனிலட்சுமி
முனிலட்சுமி
முனிகாளி
முனியப்பன்
முனியப்பு
முனியப்பா
முனிவாணி
கலைமுனி
நிலாமுனி
வான்முனி
சகாமுனி
வேல்முனி
ராஜமுனி
ராம்முனி
முனிபிள்ளையார்