Saturday, 19 August 2017

சுடுகாடு

சிவன் சுடுகாட்டில் ஆடும் சாமி என்று சிவனை விமர்சித்து இன்று பலர் நம்மையும் குழப்பி,

மற்றவர்களையும் குழப்பி வருகிறார்கள்.

இதன் உண்மை சூட்சுமம் என்ன? இதுபற்றிய ஒரு பார்வை.

சுடுகாடு என்பது உயிர் எனும் *மெய் இருந்த கூடாகிய நம் உடலை விட்டு* பிரிந்த பின் கூடு ஆகிய உடலை பயனற்ற கூட்டை நெருப்பு கொண்டு எரிக்கும் இடம் சுடுகாடு.

அதாவது, உயிர் உடல் என்னும் கூட்டில் இருக்கும் வரை, உயிரினம்,

உயிரற்ற உடல் பிணம் (சவம்).

60 – 70 ஆண்டு காலம் வாழ்ந்த கூடாகிய உடலை விட்டு உயிர் பிரியும்போது, தான் இத்தனை ஆண்டுகள் இருந்த கூட்டில் மீண்டும் நுழைய முடியாமல் நம் ஆன்மா பரிதவிக்கும்.

*ஒரு ஆண்டு வசித்தாலும் ஒரு வீட்டை விட்டு நாம் பிரியும்போது ஏற்படும் உணர்வு போல*.... 60 – 70 ஆண்டு காலம் இருந்த கூடு தமக்கு என்றும் *நிரந்தரம் என நினைத்து பேணி காத்த* உறவுகள் அனைவரும் நம் உடலை எரித்து விட்டு திரும்பிக்கூட பார்க்காமல் சென்று விடும்போது இன்புற சேர்த்த சொத்து அனைத்தும் தமக்கு இல்லை என்ற மெய்யை உணர்ந்து நமது ஆன்மா பரிதவிக்கும் போது,

மாபெரும் கருணை யாளன் எம்பெருமான் ஈசன் கருணையுடன் உயிரை தன்னுள்ளே ஒடுக்கி அந்நேரத்தில் நமக்கு அபயம் அளிக்கிறார்,

இதை உணர்த்தவே அப்பர் பெருமான் திருஅங்கமாலை தேவாரத்தில்....

*உற்றார் ஆருளரோ*
*உயிர் கொண்டு* *போகும்பொழுது*
*குற்றாலத்துறை கூத்தனல்லால் நமக்குற்றா ராருளரோ..?*

என்று மிக தெளிவாக கூறியுள்ளார்.

யார் உதவியும் ஆறுதலும் கிட்டாது அல்லல்பட்டு நம் ஆன்மா பரிதவிக்கும் நேரத்தில்,

சிவன் மட்டுமே நமக்கு கருணையுடன் அடைக்கலம் தந்து நமக்கு அருளும் மாபெரும் கருணையை உணராமல் சுடுகாட்டில் ஆடும் கடவுள் என்று சிவனை கூறுவது எவ்வளவு சிறுமை என்று உணர்ந்து பாருங்கள்.

சுடுகாட்டில் மட்டும் ஆடிக்கொண்டு இருக்கும் கடவுள் இல்லை,

அகிலத்தையே ஆட்டுவிக்கும் ஆண்டவன்,

நம் உயிரின் பரிதவிப்பை பொறுக்காமல் அந்த உயிருக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டி,

சுடுகாட்டிலும் எழுந்தருளி மாபெரும் கருணையோடு உய்வு பெறவேண்டிய உயிர்கள் உய்யும் பொருட்டு காக்கிறான் என்பதே உண்மை.

இதை உணராதவர்கள் தான் வீண்பேச்சு பேசுகிறார்கள்.

மாபெரும் கருணையாளன் ஈசன்
கருணையை உணராமல் அல்லது *மெய் உணராமல் இருப்பவர்கள்,*

மெய் உணர வேண்டி ஈசன் திருவருளால் அடியார்கள் பாதம் பணிகிறேன்
👁

Sunday, 13 August 2017

அமுக்குவான் பேய்

இரவு நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது, யாரோ உங்கள் மேல் ஏறி அழுத்துவது போல் இருக்கும்.
உங்களால் கண்ணைத் திறக்க முடியாது. கத்தலாம் என்றாலும் குரல் வெளியே வராது. சரி, திரும்பிப் படுக்கலாம் என்று நினைத்தாலும் திரும்பி படுக்க முடியாது. ஒரு நிமிடம் கழித்துத்தான் உங்களால் எதுவும் செய்யமுடியும். எழுந்து பார்த்தால் யாரும் அருகில் இருக்கமாட்டார்கள்.

என்னடா இது என்று திகைத்திருப்பீர்கள். இதுதான் அமுக்குவான் பேய். உயிரைக் கொல்லும் அளவுக்கு கொடூரமான பேய் இல்லை என்றாலும், இதுவும் ஒரு முக்கியமான பேயாக கிரேக்கப் புராணங்களில் கூறப்படுகிறது. பொதுவாய் அமுக்குவான் பேய்கள் மற்ற பேய்கள் போல் புளியமரத்திலோ வேப்பமரத்தின் உச்சியிலோ இருக்காது. பூச்சிகளின் இராஜாவான இது உங்கள் வீட்டின் சிலந்திகளின் கூட்டிற்குள், எறும்புகளின் குறிப்பாக சிவப்பு எறும்புகளின் புற்றில், கரப்பான் பூச்சிகளின் பொந்துகளில் தான் வாழும். இது உலவும் நேரம் பெரும்பாலும் சூரியன் உதிப்பதற்கு சற்று முன்பாக மூன்று மணியில் இருந்து நாலு மணி வரை ஆனால் சில சமயம் அவை பகலில் கூட வரும். என்றெல்லாம் சுவாரஸ்யமாக த்ரில்லாக கதை எழுத ஆசைதான் ஆனால் அது உண்மை இல்லையே,

என்ன செய்வது? நம்மூரில் அமுக்குவான் பேய் என்று சொல்லப்படுவது உண்மையில் தூக்க பக்கவாதம் என்கிற கோளாறு.

சில சமயம் உங்கள் மூளை விழித்துக்கொண்ட பிறகும் உங்கள் உடல் தூங்கிக் கொண்டே இருக்கும். அதனால்தான் உங்களால் எழவோ, பேசவோ, கண்களைத் திறக்கவோ முடியாது. இந்தக் கோளாறு தூக்கத்தில் ஏற்படும் இடையூறினால் இது வருகிறது. துயில் மயக்க நோய், ஒற்றைத் தலைவலி, ஏக்க நோய்கள், மற்றும் தூக்கத்தில் மூச்சுத் திணறல் ஆகிய கோளாறுகளுக்கும் இதற்கும் தொடர்புகள் உண்டு.

இதை தனிமைத் தூக்க பக்கவாதம், தொடர் தனிமைத் தூக்க பக்கவாதம் என்று இரண்டு வகைகளாகப் பிரிக்கிறார்கள். இதில் தனிமைத் தூக்க பக்கவாதம் என்பது ஒரு நபரின் வாழ்க்கையில் எப்போதாவது இரு நிமிடங்களுக்கும் குறைந்த நேரத்தில்தான் நிகழும். இது ஒன்றும் பிரச்னைக்குரியது அல்ல. தொடர் தனிமைத் தூக்க பக்கவாதம் பேருக்கு ஏற்றபடி அடிக்கடி ஏற்படும்.

மேலும் இது ஒரு மணி நேரம் வரைக்கும் கூட இருக்கும். சில சமயம் அந்தரத்தில் பறப்பது போல்கூட தோன்றும். இதற்கு மருத்துவர்களிடம் மந்திரவாதிகளிடம் அல்ல) சென்றே ஆகவேண்டும். துயில் மயக்க நோய் உடையவர்களுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களில் 50 சதவீதம் பேருக்கு இப்பிரச்னை ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், இன்றும் பெரும் அளவில் மக்கள் இது ஏதோ பில்லி சூனியத்தின் வேலை என்று நினைத்துக் கொண்டு மந்திரவாதிகளைத் தேடி ஓடிக்கொண்டிருக்கின்றனர். இந்த மாதிரி மூட நம்பிக்கைகளில் இருந்து மக்கள் விடுபடும் காலம் என்றுதான் வருமோ?

Friday, 9 June 2017

வன்னி மரம்

வன்னி மரம் மிகவும் வசீகரமான மரம். இதனுடைய இலைகள் முத‌ல் அனைத்தும் சிறப்பு வாய்ந்தது. வன்னிமரம் சனி கிரகத்துடன் தொடர்பு கொண்ட மரமாகும். இந்த மரம் சனி கிரகத்தின் நல்ல கதிர்வீச்சுகளை சுவாசித்து தன் உடலில் நிரப்பிக் கொள்கிறது. அதுதான் மருத்துவ குணங்களாக மாறுகின்றன. இந்த மரம் சனிகிரகத்தினால் உண்டாகும் நோய்களைக் குணமாக்குவதுடன் நோய்கள் வராமலும் தடுக்கின்றது. வன்னி மரம் பாலைவனப் பகுதியில் கூட வளரக்கூடியது. வன்னி மரம் என்று சொன்னாலே விருதாச்சலம் என்றுதான் அனைவருக்கும் ஞாபகம் வரும். விருதாச்சலம் விருதகிரி ஆலயத்தில் பழமையான வன்னி மரம் இருக்கிறது. இந்த வன்னி மரத்தின் இலைகளைப் பறித்துதான் அந்தக் கோயிலைக் கண்டினார்கள் என்று சொல்வார்கள். எப்படி என்றால், அங்கு விபசித்தி முனிவர் என்று ஒருவர் இருந்தார். அந்த முனிவர் அங்கேயே வாழ்ந்து அங்கேயே ஒரு கோயிலைக் கட்டிவிட்டு ஜீவ சமாதியும் அடைந்திருக்கிறார். அவர் என்ன செய்வாரென்றால், தினசரி வேலையாட்களுக்கு அந்த வன்னி மரத்தின் கீழ் உட்கார்ந்து வன்னி இலைகளை உருவி அந்த வேலையாட்களுக்கு கொடுப்பாராம். அவர்கள் எந்த அளவிற்கு உழைத்தார்களோ அந்த அளவிற்கு அது பொன்னாக மாறுமாம். ஒன்றுமே உழைக்காமல் சுற்றிக் கொண்டிருந்தால் அது இலையாகவே இருக்குமாம். கடினமாக வேர்வை சிந்தி அனைத்தும் செய்தவர்களுக்கு அத்தனையும் தங்கமாக மாறுமாம். இது வரலாற்றுச் சான்றுகளில் இருக்கிறது. கல்வெட்டுச் சான்றுகளில் இருக்கிறது. அப்படியொரு சக்தி இந்த வன்னி மரத்திற்கு உண்டு.இன்றைக்கும், குழந்தைப் பேறு இல்லாதவர்கள், மனநலம் குன்றியவர்களை அந்தக் கோயிலிற்கு அழைத்துச் செல்லலாம். அங்கு இன்னமும் அந்த பழமையான வன்னி மரம் இருக்கிறது. அதற்குக் கீழே விபசித்தி முனிவருடைய உருவமும் இருக்கிறது. அதை வழிபட்டால் எல்லா வகையிலும் சிறப்புகள் உண்டாகும். இந்த வன்னி மரப்பட்டையினுடைய கசாயம் குடித்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும். குறிப்பாக ரத்தத்தை சுத்தப்படுத்தக்கூடிய தன்மை இந்த வன்னிக்கு உண்டு. வன்னி மரக்காற்று பட்டால் கூட மிகவும் நல்லது. அந்தக் காற்றிலேயே தொடர்ந்து இருந்தால் சுவாசக் கோளாறுகள் எல்லாம் நீங்கும். வன்னிமரம் தல விருட்சமாக தஞ்சை பெரிய கோயிலிலும் மற்றும் கங்கைகொண்டசோழபுரம் கோயிலிலும் உள்ளது.

தேவி சிவன் கண நாதன் ஆகியோருக்கு மிகவும் விருப்பமானது வன்னி இலை. வேத காலத்தில் யாக குண்டத்தில் அக்னியை வரவழைக்க இரு வன்னி மரக்கட்டைகளைக் கடையும்போது எழும் நெருப்புப் பொறி பயன்பட்டது

இம்மரத்தின் உடலில் எப்போதும் அனல் கனன்று கொண்டிருக்கும்.என்பது இதிலிருந்து புலனாகிறது. வறண்ட தரிசு நிலத்தில் செழித்து வளரும் வன்னி பாலை நிலத்து விலை மதிப்பில்லாத மரம் எனப் புகழப்படுகிறது. தனக்கு வேண்டிய ஈரப்பசையை மற்ற தாவரங்களிடமிருந்து உறிஞ்சாமல் வேர்களை 30 மீட்டர் ஆழம் வரை பூமிக்குள் ஊடுருவச் செய்து நீரை உறிஞ்ச வல்லது. மணல் மேடுகள் ஏற்படுவதைக் கட்டுப்படுத்துகிறது. உயர்வகை மரக்கரியை அளிக்கிறது. நிலத்தை வளப்படுத்த நுண்ணுயிரிகளுடன் சேர்ந்து நைட்ரஜன் வாயுவை உற்பத்தி செய்து அதை மண்ணில் கலக்க உறுதுணையாக இருக்கிறது. உழவுக்கு வேண்டிய கலப்பை ஏர் ஆகியவற்றைத் தயாரிக்க இதன் மரக்கட்டை பயனாகிறது. இதன் மரப்பட்டை பலவித மருத்துவ குணங்கள் கொண்டது.

ராஜஸ்தானின் மானில மரமாகவும் ஜக்கிய அரபுக் குடியரசின் தேசிய மரமாகவும் வன்னி அங்கீகரிக்கப்பட்டுள்ளது பெருமை சேர்க்கக்கூடிய விஷயமாகும்.  வன்னிமரத்து இலை தங்கத்துக்கு ஒப்பானது என்பதற்கு புராணங்களில் ஆதாரங்கள் உள்ளன.  அதனால் தான் விஜயதசமியன்று ஆந்திராவில் இதன் இலையை “பங்காரம்” என்று சொல்லி ஒருவருக்கொருவர் கொடுத்து வாங்கிக்கொண்டு தசமியைக் கொண்டாடுவர்

மருத்துவக் குணங்கள் :

காய்: வன்னிக் காய் பெண்களின் அதிகமான மாதவிலக்கு, இரத்தப்போக்கைத் தடுக்கச் சிறந்த மருந்தாகும். இதனைப் பவுடராக்கி 5 கிராம் முதல் 7 கிராம் வரை மருந்தாகத் தரலாம்.

இந்தப் பவுடரைத் தேவைப்படும்போது சாப்பிட்டால் சீதபேதி, மூக்கில் இருந்து ரத்தம் வடிதல், இரத்த வாந்தி, சளியில் ரத்தம் கலந்து வரும் நோய்கள் கட்டுப்படும்.

வன்னிக்காயைத் தண்ணீரில் கொதிக்க வைக்கலாம். அந்நீரைக் கொண்டு வாய்க் கொப்பளித்தால் ஈறுகள், பற்கள், வாய், நாக்கின் ரணம், வலி, வீக்கம் போன்றவை குணம் பெறும்.

மரப்பட்டை: விஷக்கடியை முறிக்கும் தசைப்பிடிப்பு மூல வியாதியைப் போக்கும்.

இலை:வன்னி மரத்தின் இலைகளைக் கஷாயமிட்டு வாய் கொப்பளித்தால் பல் வலி நீங்கும். 

இலையும் பழங்களும் நரம்புத்தளர்ச்சியை நீக்கும்.

மரம்: இதன் மரத்தை எரித்துவரும் சாம்பலைக் கொண்டு பல்துலக்கினால் பற்கள் வலுப்பெறும்.

வன்னிமரத்தின் சிறப்பு
****************************
வன்னிமரம் ஜெயதேவதையின் வடிவமாக போற்றப்படுகிறது. அது துர்க்கை கோயில் கொண்டிருக்கும் இடமாகும்.

✰ வன்னிமரம் பூக்காது.  இது ஒரு அற்புதமான மரம். இது வெற்றியை தேடி தரும் மரம். இது சிவாலயங்களில் இருக்கும். நம்மை ஆளும் உமாதேவி வன்னி மரத்தடியில் தான் வாசம் செய்கிறாள்.

✰ வன்னி மரத்தடியில் விநாயகர் இருப்பது சிறப்பு வாய்ந்தது. பால், பன்னீர், இளநீரால் அபிஷேகம் செய்து, வஸ்திரம் சாற்றி வழிபட்டால் கணவன், மனைவி கருத்து வேறுபாடு மறைந்து, குடும்பம் ஒற்றுமை பெறும். குழந்தை பேறு கிட்டும். வன்னி மரத்து விநாயகரை வழிபட அனைத்து செல்வங்களும் கிடைக்கும்.

✰ ராமபிரான், இராவணுடன் போருக்கு செல்லும் முன், வன்னி மரத்தை வணங்கி விட்டு, சென்றதாக புராணத்தில் கூறப்படுகிறது. வன்னிமரம் சிவ பெருமானின் அம்சம். இந்த மரத்தடியில் தியானம் செய்தால் கேட்டது கிடைக்கும்.

✰ வில்வத்திற்கு அடுத்தது வன்னிமரம் தான் சிவனுக்கு உரியது. வில்வ மரம் எந்த அளவுக்கு சிறப்பு வாய்ந்ததோ அந்த அளவுக்கு வன்னி மரமும் சிறப்பு வாய்ந்தது. சிவனுக்கு பிடித்த மரங்களில் வன்னி மரமும் ஒன்று.

✰ வன்னிமர இலையை வடமொழியில் சமிபத்ரம் என்று கூறுவார்கள். இது விநாயகருக்கும், சனீஸ்வரனுக்கும் விருப்பத்திற்குரிய இலையாகும். விஜயதசமியின் போது துர்க்காதேவி மகிஷனை அழிக்க வேல் வாங்கும் நிகழ்ச்சி வன்னி மரத்தடியில் நடக்கும். வன்னி வெற்றியை தரும் மரம் என்பதால் அந்த மரம் இருந்தால் அங்கு வேல் வாங்குவது விஷேசம்.